ஈரானிய திரைப்பட இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை!

ஈரானைச் சேர்ந்த முன்னணி இயக்குநர் சயீத் ரூஸ்டேவுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டில் உள்ள நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

சயீத் ரூஸ்டே இயக்கிய திரைப்படம் ‘லைலா’ஸ் பிரதர்ஸ்’. இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதால் இப்படத்துக்கு கடந்த ஆண்டு ஈரான் அரசு தடை விதித்தது. டெஹ்ரானில் நிலவும் பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் கதையை இப்படம் பேசுகிறது. இந்தச் சூழலில் இப்படம் கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும், இப்படம் FIPRESCI விருதையும் வென்றது.

தடையை மீறி இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டதால் இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தின் இயக்குநர் சயீத் ரூஸ்டே மற்றும் தயாரிப்பாளர் ஜாவத் நோருஸ்பேகி இருவருக்கும் தலா ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

34 வயதான ரூஸ்டே, 2019-ஆம் ஆண்டு ஈரானின் போதைப்பொருள் பிரச்சினை குறித்து பேசிய ‘ஜஸ்ட் 6.5’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.