விக்ரம் திரைப்படத்தின் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ஜெயிலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.400 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை செய்திருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படம் வெளியாகி உலம முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.400 கோடியை தாண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் ‘ஜெயிலர்’ ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இது ஒரு வார நாளில் மிக அதிகம். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலையும் இப்படம் ஏழு நாட்களில் முறியடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் ரூ.225.65 கோடி வசூலித்து உள்ளது.

இந்தியாவைத் தவிர, உலக அளவில் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் எந்திரன் 2.0, பொன்னியின் செல்வன் -1 ஆகிய படங்களுக்கு அடுத்த படியாக 3வது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் இடம் பெற்றிருப்பதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.