ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘ஹுக்கும்’ பாடல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ஹுக்கும் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இரண்டு சிங்கிள்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இந்த இரண்டு பாடல்களும் ஒவ்வொரு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான ஹுக்கும் பாடல் குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த பாடலை எழுதிய சூப்பர் சுப்பு அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தினுடைய ஹுக்கும் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. அனிருத் இசையில் சூப்பர் சுப்பு வரிகளில் வெளியான இந்தப்பாடல் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள ‘பேர தூக்க நாலு பேரு. பட்டத்த பறிக்க நூறு பேரு. குட்டி செவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ வரிகள் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இருப்பதாக இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

மேலும், ‘உன் அலும்ப பார்த்தவன். உங்க அப்பன் வயசில கேட்டவன். உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்’ போன்ற வரிகள் ரஜினிக்காகவே எழுதப்பட்டுள்ளதாக ‘ஹுக்கும்’ பாடலை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். இதனிடையில் இந்தப்பாடல் சில விமர்சனங்களையும் கிளப்பி வருகிறது. இந்நிலையில் இந்தப்பாடலை எழுதிய சூப்பர் சுப்பு தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். அவர் கெத்தை தான் எழுதி இருக்கிறேன். பாடல் வரிகளை கேட்டு நெல்சன், அனிருத் இருவருமே சூப்பர் என பாராட்டினார்கள். அதன்பின்னர் இந்தப்பாடலை கேட்டு விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினி சாரே வாய்ஸ் நோட் அனுப்பி என்னை பாராட்டினார். நான் திருவண்ணாமலையில் இருக்கிறேன். சென்னை வந்ததும் நேரில் சந்திக்கலாம் என கூறியிருக்கிறார். இவ்வாறு அந்த பேட்டியில் உற்சாகம் பொங்க தெரிவித்துள்ளார் சூப்பர் சுப்பு.