அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது ஜன்தன் திட்டம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

ஜன் தன் திட்டம் 50 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைப் போய் சேர்ந்திருப்பதாகவும், முக்கியமாக கிராமப்புற பெண்கள் இதன் மூலம் பயனடைந்து இருப்பதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் கோடிக்கணக்கான மக்களை வங்கி நடைமுறை திட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டில் ஜன்தன் வங்கி கணக்குகள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஜன்தன் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடி மைல்கல்லை கடந்து சாதனை படைத்து உள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது : இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாகும். இந்த கணக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பெண்களுடையது. இதன்படி பெண்கள் அதிக அளவில், வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளனர். இந்த வங்கி கணக்குகளில் 67 சதவீதம் அளவுக்கு கிராமப்புற மற்றும் பிற பகுதியளவு நகர்ப்புற பகுதிகளில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளன. விளிம்பு நிலையில் இருக்க கூடிய மக்கள் உள்பட அனைத்து தனிநபருக்கும், போதிய மற்றும் முறையான நிதி சார்ந்த பலன்கள், நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று சேர்கிறது என்றும் நாங்கள் உறுதிப்படுத்தி வருகிறோம் என அவர் தெரிவித்து உள்ளார்.