ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வருகிற 7ம் தேதி நடைபெறும்!

நேற்று நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம், ஒடிசா இரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பொதுக்கூட்டம் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞரின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடக்க இருந்தது. ஒடிசா ரெயில் விபத்தை தொடர்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ரெயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.