கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் – முதலமைச்சர் அறிவுரை

கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டத்தில், கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நூற்றாண்டு விழா பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். செப்டம்பர் 17ம் தேதிக்குப் பிறகு திமுகவின் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாடுங்கள் என நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கலைஞரின் வரலாற்றை திரித்து எழுதும் கூட்டத்திடம் இருந்து உண்மை வரலாற்றை நாம் காப்பாற்ற வேண்டும். கலைஞர் கருணாநிதியின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.