200 யூனிட் இலவச மின்சாரம் திட்டத்தை தொடங்கிவைத்த கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழக்கப்படும் என அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் சித்தராமைய்யா.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தனர். தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக கடந்த மே 20-ம் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில் 200 யூனிட் இலவசமாக‌ மின்சாரம் வழங்கும் கிரஹ ஜோதி (குடும்ப விளக்கு) திட்டத்தை முதல்வர் சித்தராமையா நேற்று குல்பர்காவில் தொடங்கி வைத்தார்.

அப்போது சித்தராமையா பேசியதாவது: நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். கர்நாடகாவில் மொத்தம் 2.16 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில் 1.42 கோடி குடும்பத்தினர் இணைந்துள்ளனர். இன்னும் இந்த திட்டத்தில் சேருவதற்கான‌ கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் சில லட்சக்கணக்கான குடும்பங்கள் இணையும் என நம்புகிறேன்.

இந்த திட்டத்தில் மாதம் 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தினர் மின் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்கும் மேல் பயன்படுத்துவோருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக விநியோகிக்கப்படும். இதற்கான நிதியை மின் துறைக்கு மானியமாக அரசு வழங்கும் என தொடக்க விழாவில் பேசினார் முதலமைச்சர் சித்தராமைய்யா.