2021-ம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் கேட்டன் மேத்தா தலைமையிலான 11 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேசிய திரைப்பட விருதுக்கான ஆளுமைகளை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டது.
தெலுங்கில் வெளியான ‘புஷ்பா தி ரைஸ் (பார்ட் 1)’ படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சிறந்த நடிகைக்கான தேசிய விருது ‘கங்குபாய் கதியாவாடி’ படத்தில் நடித்த ஆலியா பட் மற்றும் ‘மிமி’ படத்தில் நடித்த கிருத்தி சனோன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஹிந்தியில் வெளியான ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
மராத்தி மொழியில் வெளியான ‘கோதாவரி’ திரைப்படத்தின் இயக்குநர் நிகில் மகாஜனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மிமி’ படத்தில் நடித்த பங்கஜ் திரிபாதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும், ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் நடித்த பல்லவி சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றுள்ளனர்.
விவேக் ரஞ்ஜன் அக்னிகோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கிஸ் தத் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ பன்மொழி பிரிவில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக தேர்வாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ‘நாட்டு நாட்டு’பாடலை பாடிய கால பைரவா சிறந்த பின்னணிப்பாடகருக்கான தேசிய விருதையும், ஷ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதையும் தட்டிச் சென்றுள்ளனர்.
சிறந்த ஹிந்தி படங்களுக்கான வரிசையில், கங்குபாய் கதியாவாடி மற்றும் சர்தார் உத்தம் ஆகிய படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக் கதைக்கான பிரிவில் ‘கங்குபாய் கதியாவாடி’ படத்துக்கு விருது கிடைத்துள்ளது. ஷெர்ஷாவுக்கு சிறப்பு ஜூரிக்கான விருது கிடைத்துள்ளது. இந்தியாவின் மிக உயரிய திரைப்பட விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
சிறந்த தமிழ்ப் படத்துக்கான பிரிவில்எம்.மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’க்கும், தெலுங்கில் ‘உபென்னா’வுக்கும், கன்னடத்தில் ‘777 சார்லி’க்கும், மலையாளத்தில் ‘ஹோம்’ திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தாண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.