மேக் இன் இந்தியா திட்டம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், பிரதமர் மோடியையும் ரஷ்ய அதிபர் புதின் பாராட்டியுள்ளார்.
ரஷ்ய அரசு மாஸ்கோவில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் மோடியையும் அவர் கொண்டுவந்த மேக் இன் இந்தியா திட்டத்தையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்தியாவில் உள்ள நமது நண்பர்களும், நமது மிகச்சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியும் சில ஆண்டுகளுக்கு முன்பு, Make In India திட்டத்தை தொடங்கினார்.
இந்த திட்டமானது இந்திய பொருளாதாரத்தில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை உருவாக்கியவர்கள் நாம் இல்லை என்றாலும், நமது நண்பர்கள் கொண்டுவந்த திட்டம் நன்றாக செயல்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து நாமும் அதனை பின்பற்றுவதில் எந்த தவறும் கிடையாது. மேலும் உள்ளூர் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்கும் பயனுள்ள மாதிரியை உருவாக்கியுள்ளார் மோடி.” என அதிபர் புதின் பேசியுள்ளார்.
உள்நாட்டிலேயே தயாரிப்புகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், அதற்கான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காகவும், இதற்காக அர்ப்பணிப்பு முதலீடுகளை பெறும் நோக்கத்துடனும் மேக் இன் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியிருந்த நிலையில் இப்போது அதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.