கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோலால் அர்ஜெண்டினா அணி வெற்றி

பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று தொடங்கி உள்ளது.

இதில் தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்றுமுன்தினம் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா, ஈக்வேடார் அணியுடன் மோதியது.

இதில் 78-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸி வலுவாக உதைத்த பந்து கோல் வலையை துளைத்தது.

176 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள மெஸ்ஸிக்கு இது 104-வது கோலாக அமைந்தது. அதேவேளையில் உலகக்கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் மெஸ்ஸி அடித்த 29-வது கோல் இதுவாகும். கடைசி வரை போராடியும் ஈக்வேடார் அணியால் பதில்கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த தொடருக்கான தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிசுற்றில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். 7-வது இடத்தை பிடிக்கும் அணி கண்டங்களுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றில் விளையாடும். அதில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.