யுஆர்எல் மூலம் பணமோசடி : உஷார் மக்களே..!

சென்னை: உலர் பழங்கள் விற்பனை என்று முகநூல் இணைப்புடன் (யுஆர்எல்) வந்த விளம்பரத்தை நம்பி, சென்னையை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பெருந்தொகையை இழந்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் வர்த்தக நிறுவனம்போல போலி தளங்களை உருவாக்கி, பொதுமக்களிடம் மோசடி செய்யப்படுகிறது. எனவே, மக்கள் உஷாராக இருக்குமாறு சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: முகநூலில் உள்ள யுஆர்எல்-களை நம்ப வேண்டாம். ஏனெனில், அவை சம்பந்தப்பட்ட தளத்தால் அங்கீகரிக்கப்படுவது இல்லை. எனவே, ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க, அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படும் செயலிகள், கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யக் கூடாது.

மோசடிக்கு உள்ளானால், உடனடியாக அந்த செயலியை செல்போனில் இருந்து நீக்க வேண்டும். மேலும், கிரெடிட் கார்டையும் முடக்க வேண்டும். பின்னர், சைபர் க்ரைம் காவல் பிரிவை கட்டணமில்லா 1930 என்ற உதவி எண் மூலம் தொடர்புகொள்ள வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு கூடுதல் டிஜிபி சஞ்சய்குமார் தெரி வித்துள்ளார்.