மகளின் கண் முன்னாலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய்:பூந்தமல்லியில் நடந்த பரிதாபம்!

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது குப்பை லாரி மோதியதில் மகளின் கண் முன்னாலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்து சேக்காடு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரி மனைவி வரலட்சுமி மற்றும் மகள் குணாளினி. தாய் மகள் இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கி கிளம்பிச் சென்றுள்ளனர்.

அப்போது மகள் குணாளினி இருசக்கர வாகனத்தை ஓட்ட, தாய் வரலட்சுமி பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறார். பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் காட்டுப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது குப்பை அள்ளும் லாரி ஒன்று அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியிருக்கிறது.

குப்பை லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த குணாளினி, வரலட்சுமி இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது வரலட்சுமியின் மீது குப்பை லாரியின் சக்கரம் ஏறி இறங்கியிருக்கிறது. அதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து இறந்துபோயிருக்கிறார் வரலட்சுமி. அருகிலேயே படுகாயங்களுடன் விழுந்து கிடந்த மகள், தாய் துடிதுடித்து இறந்ததைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார்.

பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குணாளினியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் வரலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய குப்பை லாரியின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.