போலியான கால் சென்டர் நடத்தி பலகோடி மோசடி: நொய்டாவில் 84 பேர் கைது!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் போலியான கால் செண்டர் நடத்தி வெளிநாட்டினரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 84 பேர் கைது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் ஒரு கால் சென்டர் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து செக்டார் 6 பேஸ் 1 காவல் நிலையப் பகுதியில் செயல்படும் அந்த கால் சென்டரில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான கணினிகளை போலீஸார் கைப்பற்றினர். அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் உட்பட 84 பேரை கைது செய்தனர்.

இங்கிருந்து அமெரிக்காவில் உள்ள மக்களிடம் போலியான கிஃப்ட் கார்டு, கிரிப்டோ கரன்ஸி மூலம் மோசடி செய்துள்ளது அம்பலமாகியிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் பணியாற்றிய 25 வயது முதல் 35 வயதுக்குள் இருந்த ஆண்கள் பெண்கள் இருபாலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவர்கள் அனைவரும் நன்கு படித்து ஆங்கிலப் புலமையுடன் இருந்ததனால், எளிதாக அமெரிக்க நாட்டினரை ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். கால் சென்டரின் ஆவணங்கள் மற்றும் கால் சென்டர் மூலம் நடந்த மோசடிகளை ஆராய்ந்து வருகிறோம்” என தெரிவித்தார்.