நாங்குநேரி மாணவரை வீடு புகுந்து வெட்டிய சம்பவம்: பள்ளிக்கல்வி துறை இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பித்த முதன்மை கல்வி அலுவலர்!

நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் வெட்டப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவரின் வீடு புகுந்து அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் +2 மாணவர், அவரது தங்கை படுகாயம் அடைந்தனர். மேலும் அவர்களது உறவினர் ஒருவர் சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, மாவட்ட வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்து, நாங்குநேரி சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சின்ராசு, சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கையுடன் சில பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள 17 வயது மாணவரை, விடுதியுடன் கூடிய வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தாக்குதலில் மாணவருடன் சேர்ந்து காயமடைந்த அவரது சகோதரியையும் இந்தப் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும். சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர், பொதுத் தேர்வெழுதப் போகும் 12-ம் வகுப்பு படிப்பவர் என்பதால், அவரை மனதளவில் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.