ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடரும் நீட் தற்கொலைகள் – ஒரே ஆண்டில் 25 பேர் இறப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவில் நீட் பயிற்சி பெற வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐஐடி – ஜேஇஇ நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தனியார் கோச்சிங் மையங்களில் தங்கிப் படிப்பதுண்டு.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகிவந்த 16 வயது மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர். 2023 தொடங்கியதிலிருந்து இது 25வது தற்கொலை சம்பவமாகும். கடந்த 2022-ல் கோட்டாவில் 15 மாணவர்களும், 2019-ல் 18, 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதில் 2023-ல் தான் இதுவரை இல்லாத அளவு 25 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.