சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு கட்டுப்பாடு விதித்த அமெரிக்க அதிபர்!

சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கும் தொழில் அதிபர்களுக்கு, முதலீட்டாளர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அதன்படி, செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது தடை செய்யப்படும். மேலும், மற்ற துறைகளில் முதலீடு மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இதுகுறித்து அதிபர் பைடன் தரப்பினர் கூறுகையில், “அமெரிக்காவின் வளத்தையும், துறைசார் அறிவையும் பயன்படுத்தி சீனா தன்னுடைய தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. சீனாவின் தொழில்நுட்ப முன் நகர்வை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுப்பாடு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக உத்தரவு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் சீன நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு 32.9 பில்லியன் டாலராக இருந்தது. 2022-ம் ஆண்டில் அது 9.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டில் 1.2 பில்லியன் டாலர் அளவிலேயே சீன நிறுவனங்களில் அமெரிக்கா முதலீடு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும்போது, சீனாவில் அமெரிக்காவின் முதலீடு பல மடங்கு குறையும் என சொல்லப்படுகிறது.