புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்த நியூசிலாந்து!

100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது நியூசிலாந்து அரசு.

உலகையே அச்சுறுத்தி வருகிறது காலநிலை மாற்றம். மழை வெள்ளம், புயல், வறட்சி என காலநிலை மாற்றங்களினால் உலக நாடுகள் பாதித்து வருகின்றன. சராசரி வெப்பநிலை அதிகரிப்பதினால், பனிப்பாறைகள் உருகி கடல் அளவு அதிகரித்து, நிலப்பகுதிகளுக்கு பெரும் பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனை குறைப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் காற்று, பசுமை ஹைட்ரஜன் மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால் கார்பன் உமிழ்வு குறைக்கப்படும்.

மேலும் அன்னிய முதலீடு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும். எனவே இந்த திட்டத்துக்காக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது