கட்டணமின்றியும் காலியாகக் கிடக்கும் நிரந்தர மக்கள் நீதிமன்றம்.

பல்வேறு பொதுப் பயன்பாட்டு சேவைகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் அன்றாடம் நாம் பயன்படுத்துகிறோம். இந்த சேவைகளில் பல்வேறு குறைகள், பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்போம். இது போன்ற பிரச்சினைகளில் மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்வதற்கு முந்தைய ஏற்பாடாக ‘நிரந்தர மக்கள் நீதிமன்றம்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர், இதன் தலைவராக இருப்பார். பொதுப் பயன்பாட்டு சேவைகள் தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பே அல்லது வழக்கு தாக்கல் செய்யாமலேயே சமரசமாக, இணக்கமாக பேசி தீர்வு எட்டவும், இணக்கமாக தீர்வு எட்டாதபோது, தகுதியின் அடிப்படையில் தகுந்த உத்தரவுகளையும் இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றம் பிறப்பிக்கிறது. இருப்பினும், இந்த நீதிமன்றம் தொடர்பாக பெரும்பாலான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் இதை அணுகுவோர் குறைவாக உள்ளனர்.

எந்தெந்த பிரச்சினைகளுக்கு அணுகலாம்? – இது தொடர்பாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரியில் சேர்க்கையின்போது எழும் பிரச்சினைகள், மிகையான கல்விக் கட்டணம் வசூலித்தல், பட்டம் வழங்குவதில் தாமதம், பட்டம் வழங்க மறுத்தல், சான்றிதழ்களை தர மறுப்பது, காப்பீட்டாளர்களின் உரிமை கோரலை (கிளெய்ம்) பகுதியாக அல்லது மொத்தமாக நிராகரித்தல், உரிமை கோரல்களை தீர்ப்பதில் தாமதம், காப்பீட்டு பிரீமியத்தை முறையற்ற வகையில் வசூலித்தல், பிரீமியம் வசூலித்த பிறகு எந்த ஆவணமும் வழங்காதது, மருத்துவ அலட்சியம், மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல், நோயாளிக்கு தவறான மருந்துகளை வழங்குதல், குறைபாடுடைய அறுவை சிகிச்சைகள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை சட்ட விரோதமாக துண்டித்தல், தெருவிளக்கு தொடர்பான பிரச்சினைகள், தெருக்களில் கழிவுநீர் பிரச்சினை, முறையற்ற வகையில் குப்பை கொட்டுதல், விமானம், அரசு, தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் சேவை குறைபாடு, பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சரக்கு போக்குவரத்து சேவை, அஞ்சல், தொலைபேசி சேவைகளில் குறைபாடு, வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் சேவையில் எழும் பிரச்சினைகள் உள்ளிட்டவை சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தின்படி பொதுப் பயன்பாட்டு சேவைகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மிக எளிதான மனு தாக்கல்: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது மிகவும் எளிது. நீதிமன்ற நடைமுறைகள் இன்றி சாதாரண காகிதத்தில், யார் புகார் அளிக்கிறார்களோ அவரது விவரத்தை அனுப்புநராகவும், பெறுநராக ‘மாவட்ட நீதிபதி, நிரந்தர மக்கள் நீதிமன்றம், கோவை’ என்பதை குறிப்பிட்டும், உரிய ஆதாரங்களை இணைத்தும் புகார் அளித்தால் போதுமானது. நீதிமன்றங்களின் அனைத்து வேலை நாட்களிலும், காலை 10.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படுகிறது. தாங்களே நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ நீதிமன்ற வேலை நேரத்தில் மனு தாக்கல் செய்யலாம். ரூ.1 கோடி மதிப்புள்ள தீர்வுகளுக்கான மனுக்கள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மனு மீதான விசாரணை நடைபெறும் போது புகார்தாரர், எதிர்தரப்பினர் நேரில் ஆஜராக வேண்டும். எதிர்தரப்பினரை விசாரித்து, விரைவில் உரிய தீர்வு காணப்படும். மக்கள் நீதிமன்றத்தை பொருத்தவரை மனு தாக்கல் செய்ய நீதிமன்றக் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முடிவு உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பாணைக்குச் சமமானது. கடுமையான நடைமுறைகள் இன்றி, எளிய மக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்துக்கும், நுகர்வோர் நீதிமன்றத்துக்கும் வித்தியாசம் என்ன? – தனிப்பட்ட முறையில் ஏதேனும் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் மட்டுமே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக முடியும். ஆனால், பொதுவான ஒரு பயன்பாட்டு சேவையில் குறைபாடு இருந்தால், அது குறித்து, நேரடியாக பாதிக்கப்படாதவரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யலாம். இது உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு (பிஐஎல்) தாக்கல் செய்வதை போன்றதாகும்.

உதாரணமாக, மலைப் பகுதியில் சாலை சரியில்லை என மனு தாக்கல் செய்தால், சம்மந்தப்பட்ட துறையின் அலுவலரை அழைத்து விசாரித்து நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. உயர் நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்.