டீசல் வாகனங்களுக்கு 10% கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கும் பரிந்துரை எதுவும் மத்திய அரசுக்கு வழங்கப்படவில்லை என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில் டீசல் இஞ்ஜின் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க திட்டமிட்டிருப்பதாக இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாக செய்தி வெளியானது. மேலும், இந்த யோசனையை நிதியமைச்சரிடம் இன்றே பரிந்துரைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், “டீசல் வாகன விற்பனைக்கு 10 சதவீதம் கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து தெளிவுபடுத்துவது அவசியமாகும். தற்போது அது போன்ற எந்தப் பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை.

வரும் 2070-க்குள் பூஜ்ஜியம் கார்பன் என்ற நிலையை எட்டுவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான பொருள்களால் ஏற்படும் காற்று மாசுவைக் குறைக்க நாம் ஏற்றுக்கொண்டுள்ள உறுதிமொழிக்கிணங்க, உயர்ந்து வரும் ஆட்டோ மொபைல் வளர்ச்சிக்கு மத்தியில், தூய்மையான மற்றும் பசுமையான மாற்று ஏரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த எரிபொருள்கள் இறக்குமதி செய்யாததாகவும், செலவு குறைந்த, சுதேசியான, மாசு குறைவானதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.