288 பேரின் உயிரை பலிவாங்கிய இரயில் விபத்திற்கான காரணம் இதுதான் – மத்திய இரயில்வே அமைச்சர் பரபரப்பு பேட்டி

ஒடிசாவில் கோரமண்டல் விபத்து ஏற்பட்டு 288 பேர் உயிரிழந்துள்ள நிலையில் விபத்திற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த பயங்கர விபத்தினால் இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் முழுவதுமாக மீட்கப்பட்ட நிலையில், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாலசோரில் விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை 2-வது நாளாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில், “கோரமண்டல் ரெயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டுள்ளது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடத்த இடத்தில் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரெயில் சேவையை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளோம்.

ஒடிசா ரெயில் விபத்துக்கான விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை வரட்டும் ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது. ரெயில் விபத்து தொடர்பாக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ‘கவாச் கருவி’ இருந்திருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடியாது.” என பேட்டி அளித்துள்ளார்.