ஓணம் பண்டிகை: தமிழக முதல்வர் உள்பட பல தலைவர்கள் வாழ்த்து!

கேரள மக்களின் பண்டிகையான ஓணம் இன்று (ஆகஸ்ட் 29) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிஃப் கான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தத் திருவிழா இயற்கைக்கு நன்றி சொல்லுவதற்கான வாய்ப்பு. சாதி, மதம் கடந்து அனைவரும் கொண்டாடும் இந்த விழா சமூக நல்லிணக்கம் தொடர்பான செய்தியைக் கடத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஓணம் பண்டிகை சமத்துவம், சகோதரத்துவம் போன்ற பண்புகளைப் பறைசாற்றுகிறது. இந்த நல்மதிப்பீடுகள் அமைதி, வளத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கான உந்துதலைத் தரும்.” என்று கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிஃப் கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரளாவின் தனித்துவ செய்தியான அன்பு, சமத்துவம், நல்லிணக்கத்தை ஓணம் நன்நாளில் உலகெங்கும் எடுத்துச் செல்ல கைகோக்கவும்” என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கேரள மக்கள் அனைவராலும் எழுச்சியோடும் ஒற்றுமையோடும் கொண்டாடப்படும் அறுவடைப் பெருவிழாவாம் ஓணம் திருநாளை முன்னிட்டு மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஓணம் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை ஆகிய 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.