உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 25-ந்தேதி தொடக்கம்!

இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்குபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை 25ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மொத்தம் 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை கிடைக்கும். அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி விற்கப்படும்.

மேலும் ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வருகிற 15-ந்தேதி முதல் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.