சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் பாராட்டியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அந்த சாதனையை செய்து முடித்திருக்கிறது. இஸ்ரோவால் நிலவிற்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பெரும் சாதனையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
இந்தியா வெற்றி பெறும் தருணங்களில் அமைதி காக்கும் வழக்கத்தைக் கொண்ட பாகிஸ்தான், இம்முறை இந்தியாவிற்குக் கிடைத்த இந்த வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், “இது ஒரு மகத்தான அறிவியல் சாதனை; இதனை சாதித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்கு உரியவர்கள்” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பத்திரிகைகளும் சந்திரயான்-3 வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. டான் பத்திரிகை வெளியிட்டுள்ள தலையங்கத்தில், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என குறிப்பிட்டுள்ளது. சந்திரயான்-3-ன் வெற்றியை பாகிஸ்தானின் தகவல் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஃபாவெத் சவுத்ரி பாராட்டி உள்ளார். பாகிஸ்தானின் சமூக ஊடகங்களிலும் ஏராளமான பாகிஸ்தானியர்கள் சந்திரயான்-3ன் வெற்றியை பாராட்டி உள்ளனர்.