தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1.66 லட்சமாக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு

2022-23 ஆண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக உள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “விலைவாசி உயர்வை எடுத்துக் கொண்டால்,தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. 2021-22ல் இங்கு பணவீக்கம் 7.92 சதவீதமாகவும், 2022-23ல் 5.97 சதவீதமாகவும் காணப்பட்ட நிலையில், ஒன்றிய அரசின் கணக்கை எடுத்துக் கொண்டால், 2021-22ல் 9.31 ஆகவும், 2022-23ல் 8.82 ஆகவும் இருக்கிறது.

2021ம் ஆண்டு கணக்கை எடுத்துக் கொண்டால், ஒன்றிய அரசில் பணவீக்கம் 9.3 சதவீதம், தமிழகத்தைப் பொறுத்தவரை 7.92%. 2022ல் ஒன்றிய அரசுக்கு 8.82% ஆக உயர்ந்திருந்த போது தமிழகம் 5.97 சதவீதமாக இருக்கிறோம். பணவீக்க விகிதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால், தமிழகம் இந்திய ஒன்றிய அளவைவிட குறைவாக இருக்கிறோம். 2021-22ல் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 557 ரூபாயாக இருந்தது. 2022-23ல் 1 லட்சத்து 66 ஆயிரத்து 727 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த நாட்டில் தனிநபர் வருமானம், 92 ஆயிரத்து 583 ரூபாயாக இருக்கிறது. ஒன்றிய அளவில் 2022-23ல் 98 ஆயிரத்து 374 ஆக வந்திருக்கிறது.

2011-12 நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி என்பது சமச்சீராக இல்லாமல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 2018க்குப் பிறகு கோவிட் பெருந்தொற்று வந்தபிறகு, பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய சரிவு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சரிவில் இருந்து மீண்டும் கிட்டத்தட்ட 8 சதவீதம் என்ற அளவில் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டு வருகிறது.

பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு ஒட்டுமொத்த வளர்ச்சி எதிர்மறையாக இருந்தபோது, தமிழக பொருளாதாரம் நேர்மறையாக ஒரு நிலையான இடத்தில்தான் இருந்தது. அதன்பிறகு தமிழகத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நடந்துள்ள திராவிட மாடல் அரசின் திட்டங்கள், அவர் வகுத்துள்ள பொருளாதார நோக்கங்கள், மாநில திட்டக் குழுவின் ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகள்.தமிழகம் மின்னணு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. ஏறத்தாழ இரண்டரை லட்சம் கோடி அளவுக்கு தொழில் முதலீடுகள் வந்திருக்கிறது என்றால், இதற்கு அடிப்படையான காரணம் முதல்வர்தான்” என்று அவர் கூறினார்.