நாடு முழுவதும் 10 லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்க திட்டம்: நீதா அம்பானி!

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 10 லட்சம் பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவர் என்றும் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனும், தி கேட்ஸ் ஃபவுண்டேஷனும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் மும்பையில் இன்று கூடியது. இதில் பங்கேற்றுப் பேசிய ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனத் தலைவர் நீதா அம்பானி, “பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து சிறப்பு திட்டம் ஒன்றை நாங்கள் தொடங்கி உள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் பெண் தொழில்முனைவோர் உருவாக்கப்படுவார்கள். குறைந்தபட்சம் ஆண்டு வருமானமாக ரூ.1 லட்சம் ஈட்டக்கூடிய வகையில் அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பில் கேட்ஸ், “கேட்ஸ் ஃபவுண்டேஷன் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. நான் இந்தியா வரும் ஒவ்வொரு முறையும், சுகாதாரத்திலும், வளர்ச்சியிலும் நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு வியக்கிறேன். பொருளாதார கட்டுப்பாடுகள் உள்ள போதிலும், இந்தியா போலியோவை ஒழித்திருக்கிறது; வறுமையைக் குறைத்திருக்கிறது; ஹெச்ஐவி பரவலும், குழந்தை இறப்பும் குறைந்திருக்கின்றன. சுகாதாரமும் நிதி சேவையும் மேம்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி வியக்க வைப்பதோடு, இவை தேவையான மக்களைச் சென்றடைந்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பருவநிலை மாற்றம், பெண்களுக்கான பொருளாதார மேம்பாடு, ஏழைகளின் ஆரோக்கிய மேம்பாடு ஆகியவற்றுக்காக இயங்கி வரும் எங்கள் ஃபவுண்டேஷனுடன் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் தங்கள் திறனை வெளிப்படுத்த நாங்கள் உதவ இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இதனிடையே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள் இஷா, மகன்கள் ஆகாஷ், ஆனந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். | வாசிக்க > ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குநர்களாக முகேஷ் அம்பானியின் மகள், மகன்கள் நியமனம்