சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது நாளை வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். அதைபோல சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.
தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐ.ஜி.பவானீஸ்வரிக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதைபோல பெரம்பலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன், தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜூ உள்ளிட்ட 19 பேருக்கு ஜனாதிபதியின் சேவைக்கான விருது வழங்கப்பட இருக்கிறது.