ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்த 10 அம்ச திட்டங்கள்!

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முக்கியமான 10 அம்ச திட்டங்களை வலியுறுத்தினார்.

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா, ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சேல், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் நேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 10 அம்ச திட்டங்களை வலியுறுத்தி பேசினார்.

அவர் முன்வைத்த முக்கிய 10 அம்ச திட்டங்கள் :

>சிறிய விவசாயிகள் உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய உணவுதானிய சாகுபடி முறைகளை உருவாக்க வேண்டும்.

>சிறுதானியங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் பலன்களுக்கான பாதை ஆகும்.

>உணவு பாதுகாப்பை பலப்படுத்த உணவுகள் வீணாவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

>உலகளாவிய உர வினியோக சங்கிலிகளில் உள்ள அரசியலை அகற்ற வேண்டும்.

>உரங்களுக்கு மாற்று மாதிரியை உருவாக்க வேண்டும்.

>நெகிழ்வான சுகாதார அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

>முழுமையான சுகாதார பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

>உலகம் முழுவதும் சுகாதார வசதி கிடைத்திடுவதை உறுதிப்படுத்த டிஜிட்டல் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

>சுகாதார நிபுணர்கள் போக்குவரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

>நுகர்வோர் சார்பு மாதிரிகளால் உந்தப்படாமல், வளர்ந்து வரும் நாடுகளின் தேவைகளால் ஈர்க்கப்படுகிற வளர்ச்சி மாதிரிகளை கட்டமைக்க வேண்டும்.