ஒருநாள் அரசுமுறை பயணமாக கிரீஸ் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு பின்னர், கிரீஸ் நாட்டிற்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கிருந்து இன்று கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். மேலும், அந்நாட்டின் பல்வேறு உயர் அதிகாரிகளும் பிரதமரை வரவேற்றனர்.

மேலும், கிரீஸ் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும் அதிக அளவில் திரண்டு பிரதமரை வரவேற்றனர். மேலும், இரு நாட்டு பிரதமர்கள் இடையேயான பேச்சுவார்த்தை, வர்த்தகத்திற்கும், இடம் பெயர்ந்த மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

பிரதமரின் ஏதென்ஸ் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “ஏதென்சில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர், கிரீஸ் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், அங்குள்ள தொழிற்துறையினரையும் பிரதமர் சந்திக்க உள்ளார். ஏதென்ஸில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, அங்குள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து அவர்களோடு உரையாட உள்ளார்” என தெரிவித்தார்.