முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த இளைஞர்கள் உள்ளிட்ட சிலருக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
இளைஞர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில், முதல் தலமைமுறையாக கல்லூரிக்குள் கால் அடி எடுத்து வைத்த இளைஞர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த இளைஞர்கள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு, அரசாணையாக வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “மனித வள மேலாண்மைத்துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை தொடர்பான உரையின்போது, நிதி, மனிதவள மேலாண்மை அமைச்சர், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்படுகின்ற அரசுப் பணியிடங்களில், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சட்டமன்ற பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
2010-2011-ம் கல்வியாண்டு முதல் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பத்திலிருந்து ஒற்றைச்சாளர முறையில் தொழிற்கல்வி பயில தேர்வுபெற்ற மாணவர்களுக்கு சாதிப் பாகுபாடின்றியும், வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் சில நிபந்தனைகளுடன் அரசே ஏற்கும்.
அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இவ்வரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.