பிரபலமான பால் பாயிண்ட் பேனாவின் தயாரிப்பு நிறுத்தப்படுகிறதா?:ரெனால்ட்ஸ் நிறுவனம் விளக்கம்!

நீல நிற மூடி கொண்ட வெள்ளை நிற ரெனால்ட்ஸ் பேனா, இந்திய பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். சச்சின் டெண்டுல்கர் இந்தப் பேனா விளம்பரத்தில் நடித்ததால், பலரும் அதை சச்சின் பேனா என்றும் அழைப்பதுண்டு.

ரெனால்ட்ஸ் நிறுவனம் இந்தப் பேனாவை 1945-ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது. இதனால், இந்தப் பேனா கிளாசிக் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்தப் பேனாவை ரெனால்ட்ஸ் நிறுவனம் இன்னமும் தயாரித்து வருகிறது. இந்நிலையில், “ரெனால்ட்ஸ் 045 பால் பாயிண்ட் பேனாவின் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது. இனி அது விற்பனைக்கு வராது. ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது” என்று சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு வைரலானது. பலரும் இந்தப் பேனாவுடனான தங்கள் பால்ய நினைவுகளை பகிரத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த பேனாவின் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக பரவிவரும் தகவல் தவறானது என்று ரெனால்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்கள் நிறுவனத்தின் ரெனால்ட்ஸ் 045 பால் பாயிண்ட் பேனாவின் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக சமூக வலை
தளங்களில் தகவல் பரவி வருகிறது. அது பொய்யான தகவல்” என்று தெரிவித்துள்ளது.