தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவு: பாலச்சந்திரன் தகவல்!

தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் வட மேற்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பை விட மிகவும் குறைவான மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

வேலூரில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்து கால்நடை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நேற்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கருணா கரன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்க.தமிழ் வாணன் வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குநர் சே.பாலச்சந்திரன் பங்கேற்று பேசும்போது, ‘‘ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற காற்று வீசும் திசை, அதன்போக்கு, வெப்ப நிலை, ஈரப் பதம் ஆகியவற்றை அறிந்து வானிலை ஆய்வு மையம் சார்பில் வேளாண்மைக்கு உதவி செய்கிறோம்.

இதனை, விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது, வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை வேளாண்மைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்கள், செயற்கைக் கோள் தரவுகள், ரேடார் மூலம் கிடைக்கப் பெற்று பகிறப்படுகின்றன. இதனை விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்’’ என்றார்.

பின்னர் சே.பாலச்சந்திரன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தென்மேற்கு பருவமழை காலத் தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் இயல்பை விட 9 சதவீதத்துக்கும் குறைவான மழைப் பொழிவு பதிவாகி இருக்கிறது. இருப்பினும், தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட் டங்களில் இயல்பைவிட மிகவும் குறைவான மழை பதிவாகியுள்ளது.

குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் குறைவான மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் மேகக் கூட்டங்கள் இல்லாததால் காற்றின் ஈரப்பதம் குறைந்திருப்பதால் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்து காணப் படுகிறது. அதிக வெப்ப நிலையால் அவ்வப்போது ஏற்படும் இடி, மேகக் கூட்டங்களால் மழைப் பொழிவு இருக்கிறது.

வானிலையை துல்லியமாக கணக்கிட மாவட்டங்கள்தோறும் தானியங்கி மழை மானி பொருத்தப்பட்டதால் தற்போது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது 6 மணி நேரத்துக்கு ஒருமுறை மழை நிலவரம் குறித்து துல்லியமாக கணக்கிடப்படுகிறது’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் அந்துவன்,

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி திட்ட தொழில் நுட்ப அலுவலர் திவ்ய லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் இயல்பை விட 9 சதவீதத்துக்கும் குறைவான மழைப் பொழிவு பதிவாகி இருக்கிறது.