இன்று நிலவில் தரையிறங்குகிறது ‘ராஷித் ரோவர்’

இன்று நிலவில் தரையிறங்குகிறது ‘ராஷித் ரோவர்’

ஐக்கிய அமீரகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட முதல் விண்கலமான ராஷித் ரோவர் இன்று நிலவில் கால்பதிக்க உள்ளது.

துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் முழுக்க முழுக்க அமீரக விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது ராஷித் ரோவர் விண்கலம். இந்த விண்கலம் டிசம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்திற்கு துபாயின் முன்னாள் ஆட்சியாளர் மறைந்த ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூமின் நினைவாக ராஷித் என பெயரிடப்பட்டுள்ளது.

ஐந்து மாத பயணத்திற்குப் பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்திருக்கிறது ராஷித் ரோவர். நிலவின் சுற்றுவட்டப்பாதையில் அமீரகத்தின் ராஷித் ரோவரை சுமந்து கொண்டு சுற்றி வரும் ஹக்குட்டோ-ஆர் லேண்டர் அனைத்து விதமான தொழில்நுட்ப செயல்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சரியான திசையில் பயணம் செய்து கொண்டு இருக்கும் இந்த லேண்டர் விண்கலம் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது.

இன்று தரையிறங்கி மொத்தம் 12 நாட்கள் அங்கு ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ராஷித் ரோவர் நிலவின் மண் மற்றும் மேற்பரப்பை முப்பரிமாண கேமரா மூலமாக உயர்தரத்தில் துல்லியமாக படம் பிடித்து அனுப்ப இருக்கிறது. குறிப்பாக நுண்ணொக்கி மூலம் எடுக்கப்படும் படங்கள் மண்ணியல் ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசுப்படலங்கள், நிலவின் பாறைப்படலம் குறித்த ஆய்வு, புதிய தொழில்நுட்பங்களுக்கான 10 ஜிகாபைட் அளவுள்ள தரவுகள் சேகரிப்பு போன்றவைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.ராஷித் ரோவர் மூலம் பெறப்படும் தரவுகள் அனைத்தும் சூரிய மண்டலம் மற்றும் பூமியின் தோற்றம் குறித்து ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெவித்துள்ளனர்.