இந்தியாவின் பணக்கார பெண் தொழில்முனைவோராக வளம்வரும் திவ்யா கோகுல்நாத் அவர்களின் வாழ்க்கை பயணம் குறித்த சிறப்பு கட்டுரை!
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற நிலை மாறி… இப்போது பெண்கள் சாதிக்காத துறையும் கிடையாது பெறாத புகழும் கிடையாது. ஆமாம், உலக அளவில் பல பெண்கள் தொழில்முனைவோராக சாதனை படைத்து லட்சங்களில் அல்ல… கோடிகளில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்து உழைப்பின் மூலம் தலைசிறந்த பெண் தொழில்முனைவோராக வளம் வரும் பெண்களின் பட்டியலை இங்கே குறிப்பிட இடம் போதாது. ஆனால், அந்த பட்டியலில் நிச்சயம் திவ்யா கோகுல்நாத்தின் பெயர் இடம்பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
யார் இந்த திவ்யா கோகுல்நாத்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். குறுகிய காலத்தில் தன் உழைப்பினால் உயர்ந்த பிரபலமான பெண் தொழில்முனைவோர் தான் திவ்யா கோகுல்நாத். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுதும் அறியப்படும் Byju’s ஆன்லைன் வழியில் கல்வி கற்பிக்கும் தளத்தின் இயக்குநர் மற்றும் இணை நிறுவனராக இருப்பவர்தான் இவர்.
பெங்களூரில் பள்ளிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தவர், தான் படித்த பொறியியல் பட்டப்படிப்பு தொடர்பான வேலைக்குப் போகும் ஆர்வம் அவருக்கு இல்லை. மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் ; அதன் மூலம் வரும் சொற்ப வருமானமாமே போதும் என நினைத்துள்ளார். அப்போதுதான் அவருக்கு பைஜூஸ் ரவீந்திரன் என்ற கல்வியாளரின் தொடர்பு கிடைக்கிறது. 2007ம் ஆண்டு Byju’s-ல் ஆசிரியராக பணிக்கு சேர்ந்திருக்கிறார். Byju’sல் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த காலகட்டத்தில் அவரது 21 வயதில் அதில் பணிக்கு சேர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்திருக்கிறார் திவ்யா கோகுல்நாத்.
Byju’s-ஐ தொடங்கிய ரவீந்திரனுக்கு திவ்யா கோகுல்நாத்தின் மீது விருப்பம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொள்கிறார். பின்னர், இருவரும் சேர்ந்து 2012ம் வருடம் பைஜூஸ் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். திவ்யா கோகுல்நாத், வீடியோ மூலமாக வகுப்புகளை எடுத்துள்ளார். அது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாது. பைஜூஸில் மூலமாக படிக்கும் மாணவர்களின் அனுபவங்களை கேட்டு அதனை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த செயல்பாடுகளில் அதனை நடைமுறைப்படுத்துவது, என்னென்ன பாடங்களை எப்படியெல்லாம் புரியும்படியும் சுவாரசியமாகவும் கொண்டுபோய் சேர்க்கமால் என்ற திட்டமிடல், பைஜூஸை எப்படி ஒரு பெரிய பிராண்டாகவும் மாற்றுவது என்பதுகுறித்த விளம்பர யுக்தி ஆகிய அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார்.
2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஏற்கனவே அதனை சிறப்பாக செயல்படுத்தி காட்டியிருக்கும் திவ்யா கோகுல்நாத், கொரோனா காலகட்டத்தை அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். பைஜூஸ் தளத்தில் ஆன்லைனில் வீடியோக்களை பார்த்து படிப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த சூழலில்… கொரோனா காலத்தில் அதற்கான கட்டணங்கள் எதுவும் வசூலிக்காமல், மாணவர்களுக்கு இலவசமாகவே பைஜூஸின் வீடியோக்களை பார்த்து படிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதன் காரணமாக பைஜூல் மூலமாக ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்தது. பயனாளர்கள் அதிகரிக்கவும் அதன் மூலம் தற்போது பைஜூஸ் நிறுவனத்திற்கு வருமானமும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பைஜூஸ் ஆன்லைன் ஆப் பயன்படுத்தாத மாணவர்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறார் திவ்யா. அதன் மூலம் அவர் சம்பாதித்த சொத்து மதிப்பு ரூ.4550 கோடி. வளர்ந்துவரும் பெண் தொழில்முனைவோராகவும்… வருங்காலத்தில் பெண் சாதனையாளர்கள் பட்டியலில் திவ்யா கோகுல்நாத்தின் பெயர் தவிர்க்க முடியாத நபராக அவர் திகழ்வார் என்கிறார்கள்.
கல்வி தளத்தில் அவரது இந்த வளர்ச்சி காரணமாக, 2022ம் ஆண்டு இந்திய வர்த்தக சங்கங்களின் தொழில்துறை கூட்டமைப்பின் கல்வி சார்ந்த பணிக்குழுவின் தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ளார் திவ்யா கோகுல்நாத். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதுவும் இரண்டாவது குழந்தை கொரோனா காலகட்டத்தில் பிறந்ததனால், ஒரு பக்கம் குழந்தையையும் இன்னொருபக்கம் மாணவர்களுக்கு தினமும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது என அவருடைய நேரத்தை நிர்வகத்து… இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார். படித்த படிப்பு பயனற்றதாகிவிடக்கூடாது என்ற முனைப்பும் அவரது உழைப்பும் அவரை சிறந்த தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது.