மணிப்பூரில் மீண்டும் கலவரம் – 3 பேர் சுட்டுக்கொலை, வீடுகள் எரிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கலவரம் நீடித்து வந்த நிலை தற்போது வன்முறை குறைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கலவரம் வெடித்திருப்பதாகவும், அதில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. ஒரு சில பகுதிகள் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கலவரம் வெடித்ததில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட மூன்று பேருமே மைத்தி சமூகத்தை சேர்ந்தவர்கள். அதனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மைத்தி சமூகத்தினர் குகி சமூகத்தினருடைய வீடுகளுக்கு தீ வைத்தனர். அதனால் மீண்டு பதற்றம் ஏற்பட்டிருப்பதால், நீக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது அம்மாநில அரசு.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று வெடித்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் அப்பா, மகன் ஆகிய இருவர் மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த மற்றொருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் இரண்டு ஆயுதக்கடங்குகளில் ஆயுதங்கள், தோட்டாக்கள் சூறையாடப்பட்ட நிலையில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குகி இனமக்கள் நடத்திய தாக்குதலில் மைத்தேயி இனமக்கள் 3 பேர் உயிரிழந்து உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை சுமார் 150 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அங்கு வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவது அங்குள்ள மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.