இந்திய வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாரா கடன் செயல்படாத சொத்தாக மாற்றம் : நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிதி அமைச்சகம்!

கடந்த 9 ஆண்டில் இந்திய வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாரா கடன் செயல்படாத சொத்தாக மாற்றம் செய்திருப்பதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வங்கிகள் வழங்கும் கடன்கள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் திரும்பி வராதபட்சத்தில் அவை வாராக் கடன்களாக கருதப்படும். நீண்ட காலம் ஆகியும் திரும்பி வராதபட்சத்தில், வங்கிகள் தங்கள் பேலன்ஸ் ஷீட்டில் அந்த கடன் தொகையை நீக்கிவிடும்.

கடன் வழங்கல் செயல்பாட்டில் சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டு வங்கிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது வழக்கம். இது ‘ரைட் ஆஃப்’ என்று அழைக்கப்படுகிறது. அதேசமயம், இந்த கடன் தொகையை, வசூலிக்கும் பணிகள் தனியாக நடைபெறும்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “2014-15 நிதி ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.14.56 லட்சம் கோடி வாராக் கடன்கள் செயல்படாத சொத்தாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ரூ.7.40 லட்சம் கோடி தொழில் மற்றும் சேவைத் துறை நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய வாராக் கடன்களாகும். மொத்த ரைட் ஆப் செய்யப்பட்ட கடன்களில் இதுவரையில் ரூ.2.04 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்தது. 2023 மார்ச்சில் அது ரூ.4.28 லட்சம் கோடியாக குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.