ரூ.24,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – ரிசர்வ் வங்கி தகவல்!

2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் இன்னும் ரூ.24,000 கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பினை கடந்த மே 19-ம் தேதி வெளியிட்டது. இந்த நோட்டுகளை வரும் 30-ம் தேதி வரையில் மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ரூ.2,000 நோட்டுகளை எளிதான முறையில் வங்கிகளில் மாற்றிக்கொள்ள போதுமான முன்னேற்பாடுகள் செய்யபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.32 லட்சம் கோடி. இதையடுத்து, புழக்கத்தில் உள்ள எஞ்சிய ரூ.2,000 நோட்டுகளின் மதிப்பானது தற்போது ரூ.24,000 கோடி என உள்ளது. இதன்படி புழக்கத்தில் இருந்த 93% 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரும் 30-ம் தேதி வரையில் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலாவதியாகிவிடும் நிலையில், இப்போது இன்னும் வங்கிகளுக்கு வந்த சேர வேண்டிய 7% ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.