கர்நாடக அமைச்சர்களுக்கு சொகுசு கார் – நிதி ஒதுக்கிய முதலமைச்சர் சித்தராமைய்யா

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசில் அங்கம் வகிக்கும் 33 அமைச்சர்களுக்கு சொகுசு கார் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான‌ காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ளது. தேர்தலின்போது அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500, மாதம் 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் மின்சாரம், பேருந்தில் மகளிருக்கு இலவசம் ஆகிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சித்தராமையாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் 33 பேருக்கு பழைய கார்களுக்கு பதிலாக புதியதாக சொகுசு கார் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 33 அமைச்சர்களுக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்பிலான இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் சொகுசு கார் வாங்க ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள‌து. இந்த வாகனங்களை டொயட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.