1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை!

1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

1500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ரூ.79.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில். “விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய தமிழக முதல்வரின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்களுக்கு வீடுகள் ரூ.45.00 கோடி மதிப்பீட்டில் தகுதியின் அடிப்படையில் கட்டித் தரப்படும்”

மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் தற்போது பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 பழங்குடியினர்களுக்கு தமிழ்நாட்டில், 19 மாவட்டங்களில் வீடுகள் கட்டுவதற்கு ரூ.79,28,40,000/- (ரூபாய் எழுபத்து ஒன்பது கோடியே இருபத்து எட்டு இலட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட 1500 வீடுகளை விரைந்து கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.