மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் அதிகாரத்தில் இருந்துகொண்டு பாஜக ஆட்சியினை நடத்துகிறார்கள் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
லடாக் பகுதியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நான்கு நாள் பயணமாக நேற்று ராகுல் லடாக் சென்றார். அங்கே கார்கில் பகுதி இளைஞர்களை சந்தித்துப் பேசவுள்ளார். லடாக் ஹில் கவுன்சில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் லடாக் பயணம் கவனம் பெற்றுள்ளது. அதுவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்குள்ள லடாக் பகுதிக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பாஜகவின் கொள்கை ஊற்றான ஆர்எஸ்எஸ் தான் நாட்டின் அனைத்து துறைகளையும் ஏற்று நடத்துகிறது. இதற்காக ஒவ்வொரு துறையில் ஆர்எஸ்எஸ் சார்புடைய நபர்கள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுகின்றனர். மத்திய அமைச்சர்களே பலரும் தங்களின் துறைகளை தாங்கள் வழிநடத்தவில்லை மாறாக, ஆர்எஸ்எஸ் சார்புடைய அதிகாரிகள் தான் நடத்துகின்றனர். அவர்கள்தான் எல்லாவற்றையும் பரிந்துரைக்கின்றனர் என்று குமுறுகின்றனர்.
இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்தது. அந்தச் சுதந்திரத்தின் தொகுப்பு தான் இந்திய அரசியல் சாசனம். அரசியல் சாசனம் என்பது அரசின் சட்டத்திட்டங்கள். அரசியல் சாசனத்தின் இலக்குக்கு உதவவே அதன் அடிப்படையில் துறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அந்த அரச கட்டமைப்புகளில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்களின் ஆட்களை முக்கியப் பொறுப்பில் அமர்த்தி எல்லாவற்றையும் சிதைக்கிறது” என பேசினார்.