நிலவுக்கு விண்கலம் அனுப்பிய ரஷ்யா சந்திரயானுக்கு முன்னரே தரையிறக்கத் திட்டம்:லூனா-25!

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய ரஷ்யா: சந்திரயானுக்கு முன்னரே தரையிறக்கத் திட்டம்.

1976-க்குப் பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில், “லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

உறுதி செய்த ரோஸ்கோஸ்மோஸ்: சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதை, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்காஸ்மோஸ் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே உறுதிப்படுத்தியது.

இஸ்ரோவின் சந்திரயான் – 3: நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், ஆக.5-ம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஆக.23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.