இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது எழுத்தாளர் உதயசங்கருக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் ராம் தங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சிறுவர் இலக்கியம் மற்றும் இளைஞர்களுடைய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி அமைப்பு பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருது கொடுத்து கவுரவித்து வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த வருடம் பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், எழுத்தாளர் உதய சங்கரின் ஆதனின் பொம்மை என்ற நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பிற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதனின் பொம்மை புத்தகம், கீழடி ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுவர் இலக்கிய படைப்பு. அதேபோல நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கில் அம்மக்களின் கதைகளை சிறுகதைகளாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ராம் தங்கம். இந்தப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி அமைப்பு விருது அறிவித்து கவுரவித்திருக்கிறது.

விருது பெற இருக்கும் எழுத்தாளர்கள் இருவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். “நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதனின் பொம்மை-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.