சம்பளம் இன்னும் வர்ல:தவிக்கும் தற்காலிக ஆசிரியர்கள்!

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.24 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை சமாளிப்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2023-24) அரசுப் பள்ளிகளில் இருந்த ஆசிரியர் காலிப் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) மூலம் தற்காலிகமாக அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன. அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் முறையாக தரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறைதான் வழங்குகின்றனர். இதனால் இந்த வேலையை நம்பியுள்ள பட்டதாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்துக்குகூட கடன் வாங்கிச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. ஊதியத்தை மாதந்தோறும் சரியாக வழங்கினால் நன்றாக இருக்கும். கடந்தாண்டை போலவே தற்போதும் தாமதம் செய்து வருகின்றனர். பள்ளிகள் திறந்து 3 மாதங்களாகிவிட்ட சூழலில் இதுவரை தொகுப்பூதியம் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் தருவதற்கான நிதி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. அதனால் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. சில மாவட்டங்களில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பதில் நிலவும் இழுபறியால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். அவற்றை விரைந்து களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றனர்.