ரூ.1.14 கோடி விலையில் 110 அங்குல மைக்ரோ எல்இடி டிவியை அறிமுகம் செய்தது சாம்சங்!

ரூ.1.14 கோடி விலையில் 110 அங்குல மைக்ரோ எல்இடி தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. பார்வையாளர்களுக்கு பிரீமியம் பார்வை அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த தொலைக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என சாம்சங் தெரிவித்துள்ளது.

சுமார் 24.8 மில்லியன் மைக்ரோ மீட்டர் அளவிலான அல்ட்ரா-சிறிய எல்இடி-கள் இந்த தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த மைக்ரோ எல்இடி-கள் அனைத்தும் தனித்தனியாக ஒளி மற்றும் வண்ணத்தை வழங்குவதன் மூலம் பார்வையாளர்கள் தனித்துவ பார்வை அனுபவத்தை பெற முடியும் என தெரிகிறது. மைக்ரோ எல்இடி, மைக்ரோ கான்ட்ராஸ்ட், மைக்ரோ கலர், மைக்ரோ எச்டிஆர் மற்றும் மைக்ரோ ஏஐ ப்ராசஸர் போன்றவற்றை இந்த டிவியில் உள்ள மைக்ரோ எல்இடி தொழில்நுட்பம் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலமணி (Sapphire) கற்கள் மெட்டீரியலில் மைக்ரோ எல்இடி-கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்தியாவில் குறிப்பிட்ட சில ரீடெயில் ஸ்டோர்களில் மட்டும் இந்த டிவி விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,14,99,000.

இந்த டிவி அரீனா சவுண்டுடன் வருகிறது. ஓடிஎஸ் புரோ, டால்பி ஆட்டம்ஸ் மற்றும் Q சிம்பொனி ஆகிய மூன்றின் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 3டி ஒலி அவுட்புட் கிடைக்கிறது. மேலும், இதில் உள்ள மைக்ரோ ஏஐ ப்ராசஸர் பழைய வீடியோக்களுக்கு புதுப்பொலிவுடன் புத்துயிர் தருமாம். ஆம்பியன்ட் மோட்+ மற்றும் ஆர்ட் மோடையும் இந்த டிவி கொண்டுள்ளது.