கழிவுநீரை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த துப்புரவு பணியாளர்கள்

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ஓசிஎஃப் தொழிற்சாலை குடியிருப்புப் பகுதியில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், மத்திய படை உடை தயாரிப்பு தொழிற்சாலையின் (ஓசிஎஃப்) குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது தொழிலாளர்கள் இருவரும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகினர். இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தொட்டியில் இருந்த தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தொழிலாளர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது மற்றும் திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றக் கூடாது. மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன்படி, எந்தவொரு நபரும் ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.

அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9-ன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்’ என்ற விதிகளை மீறி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.