சரத்குமார்-கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் தக்‌ஷிணா மூர்த்தி இயக்கத்தில் சரத்குமார் மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் நடித்துள்ள படம் ‘கிரிமினல்’. இப்படத்தை பர்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ‘கிரிமினல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இயக்குநர் தக்‌ஷிணா மூர்த்தி கூறுகையில், “நான் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்த போது, ஒன்றிரண்டு கதைகளை எழுதியிருந்தேன். அதனை நிறைவு செய்ய நிறைய தடைகளை கடக்க வேண்டியிருந்தது. மதுரையை களமாகக் கொண்ட பல காதல் திரைப்படங்கள் வந்துள்ளன. ஆனால் இதில் இருந்து ‘கிரிமினல்’ திரைப்படம் மாறுபட்டு இருக்கும். இந்தப் படத்துக்காக மதுரையைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகளை சொந்தக் குரலில் நடிக்கவும், டப்பிங் செய்யவும் வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து இருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய மணிகண்டன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.