நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்தவர் ஜெயப்பிரதா. தமிழில் ’நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ஜெயப்பிரதா. மேலும் 2004 முதல் 2014 வரை உத்தர பிரதேச மாநிலம், ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் ஒன்றை ஜெயப்பிரதா நடத்தி வந்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியத்தில் இஎஸ்ஐ தொகை பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆனால் அவரது திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் ஜெயப்பிரதா செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை எதிர்த்து ஜெயப்பிரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழலில் இந்த வழக்கை இன்று விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.