மின்சார வாகனங்கள் உற்பத்தி துறை வளர்ச்சியால் சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்!

எதிர்காலத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் ஏற்பட உள்ள வாய்ப்புகளை சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் ‘எம்எஸ்எம்இ’ துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி நிறுவனமான எம் எஸ் எம் இ, ‘ஃபேம் தமிழ்நாடு’ பிரிவு மற்றும் உலக வளங்கள் நிறுவனம் சார்பில் தமிழகத்தை உலகளாவிய மின்சார வாகனங்கள் உற்பத்தி கேந்திரமாக மாற்ற உதவும் திறன் மேம்பாட்டு பயிலரங்கு கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. குறு, சிறு, நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழக அரசின் ‘ஃபேம் தமிழ்நாடு’ பிரிவு மற்றும் உலக வளங்கள் நிறுவனம்(இந்தியா) இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் எம்எஸ்எம்இ துறை செயலர் அருண்ராய் காணொலி வாயிலாக பயிலரங்கை தொடங்கிவைத்து பேசும்போது, ‘‘மின்சார வாகனங்கள் உற்பத்தியில் உலகளவில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்பட ஆயத்தமாகி வருகின்றன. எதிர்வரும் காலங்களில் மிகச் சிறந்த வளர்ச்சி பெற உள்ள இத்துறையில் உள்ள வாய்ப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கு இது போன்ற திறன் மேம்பாடு நிகழ்ச்சி மிகவும் உதவும். திறமைகளை தொழில்முனைவோர் மேம்படுத்திக்கொண்டு எதிர்காலத் தில் மின்சார வாகனங்கள் உற்பத்தித்துறையில் அதிக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்’’என்றார்.

உலக வளங்கள் நிறுவனம் (இந்தியா) இணை திட்ட இயக்குநர் அஷ்வினி பேசும்போது, ‘‘ஆட்டோமொபைல் துறையில் ஏற்கெனவே சிறந்த கட்டமைப்பு கொண்டுள்ள தமிழகம் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்க நல்ல வாய்ப்பு உள்ளது. மின்சார வாகனங்கள் தயாரிப்புக்கு தேவைப்படும் பல்வேறு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதற்கான திறன்களை தொழில்முனைவோர் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்வரும் காலங்களில் எம்எம்எஸ்இ தொழில் நிறுவனங்கள் மின்சார வாகனங்களால் சிறந்த வளர்ச்சி பெறும். அதிக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்’’என்றார்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் பேசும்போது, ‘‘தமிழக அரசின் உதவியுடன் கோவையில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு கிளஸ்டர், பொது பயன்பாட்டு மையம் மற்றும் மின்சார வாகனங்கள் சோதனைக்கூடம் உள்ளிட்டவை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இந்நிகழ்வு நடக்கிறது. இதுபோன்ற முன்னெடுப்புகளால் தமிழகம் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் சிறப்பான வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை’’என்றார்.