நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்டார்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நீட் தேர்வு தோல்வி காரணமாக கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை – குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19) இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகன் உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலைக் கைப்பற்றி சிட்லப்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2021-ல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஜெகதீஸ்வரன், மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சியும் பெற்றுள்ளார். இருந்தும் இரண்டு முறை தேர்வு எழுதி தோல்வியை தழுவிய காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என செல்வசேகர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ஜெகதீஸ்வரனுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. நள்ளிரவு வரை செல்வசேகருடன் உறவினர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.