10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த இரண்டு கைகளை இழந்த மாணவர் கீர்த்தி வர்மாவுக்கு அதிகாரிகள் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு!

இரண்டு கைகள் இன்றி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் அதிகாரிகள் நேரில் வாழ்த்து!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். நான்கு வயதில் மின்சாரம் தாக்கி தனது இரண்டு கைகளையும் இழந்த மாணவர் கீர்த்தி வர்மா நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். தற்போது நடந்து முடிந்த பொது தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து உள்ளார். இரண்டு கைகளின்றி தன்னம்பிக்கையுடன் படித்து முதலிடம் பிடித்த மாணவனை தமிழக முதல்வர் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன், இரண்டு கைகள் இன்றி தவித்து வரும் மாணவனுக்கு செயற்கை கைகள் பொருத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் சார்பாக மாணவனுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. இதுகுறித்து மாணவர் கீர்த்தி வர்மா, செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை ஒரு பள்ளியில் படித்தேன். ஆறாவது முதல் பத்தாவது வரை நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவுடன் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 437 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன் இதற்காக தமிழக முதலமைச்சர் அவர்கள் எனக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார். அவர் பேசும்போது எனக்கான மருத்துவ செலவு அனைத்தும் அரசு சார்பாக செய்து கொடுக்கப்படும். அது மட்டுமல்லாது இரண்டு கைகளுக்கும் செயற்கை கைகள் பொருத்திக் கொடுக்கப்படும் என கூறினார். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவர் சொன்ன மாதிரியே நிறைய அதிகாரிகள் என்னை தேடி வந்து எனக்கு ஆதரவு தெரிவித்து நிறைய உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு உதவி செய்வதாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என மாணவன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர் கீர்த்தி வர்மனுக்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இந்நாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் வாழ்த்த் தெரிவித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்ததோடு, முதலமைச்சர் உறுதி அளித்தது போல அரசு சார்பாக மாணவருக்கான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என கூறினார்.