சந்திரயான்-3 மிஷன் வெற்றி பெறுவது நிச்சயம்: இஸ்ரோ தலைவர் பேட்டி!

இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-3 மிஷனின் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணி அளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குகிறது.

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-3 மிஷனின் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மிஷன் வெற்றிகரமானதாக இருக்கும் என்பதில் நாங்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த நம்பிக்கை எங்கள் குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக செலுத்திய உழைப்பினால் உருவானது. கடந்த 2019-ல் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும்போது மோதி நொறுங்கியதிலிருந்து நாங்கள் சந்திரயான்-3 பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

4 ஆண்டுகள் உழைப்பு என்பது குறுகிய காலம் அல்ல. அதனால் நாங்கள் சந்திரயான்-3 நிச்சயமாக வெற்றி பெறும் என்று கொண்டுள்ள நம்பிக்கை மிதமிஞ்சிய நம்பிக்கையும் அல்ல. இந்த மிஷனை முன்னெடுத்துச் செல்வதில் சிறுசிறு வாய்ப்புகளையும் கூட மிகக் கவனமாகப் பயன்படுத்தியுள்ளோம். சொல்லப்போனால் பேக் அப் திட்டங்களைக் கூட தயார் செய்திருந்தோம்.

இந்தத் திட்டத்தில் இப்போதுவரை நாங்கள் திட்டமிட்டபடியே அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாங்கள் எதிர்பாராத சில ஆச்சரியமான முடிவுகளும்கூட கிடைத்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், முன்னதாக வெறும் 3ல் இருந்து 6 மாதம் வரை ப்ரொபல்சன் மாட்யூல் சுற்றுவட்டப்பாதையில் உலாவி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்படி திட்டமிட்டிருந்தோம். ஆனால் மாட்யூல் எரிபொருளை அதிகம் பயன்படுத்தப்படாததால் ஆராய்ச்சிகளை ஆண்டுக் கணக்கில் தொடர இயலும். மேலும், லேண்டர் விண்கலனின் ஆரோக்கியத்தை பல்வேறு கட்டங்களிலும் பரிசோதித்த பின்னரே நாங்கள் அதை தரையிறக்கத் திட்டமிட்டுள்ளோம். 

சந்திரயான் – 2 இறுதிக்கட்டம் வரை சீராகச் சென்றது. ஆனால் அதனை மென்மையாக தரையிறக்க இயலவில்லை. நாங்கள் அதை அதிக திசைவேகத்தில் (வெலாசிட்டி) இயக்கியதே க்ராஷ் லேண்டிங் ஆகக் காரணம். மேலும் லேண்டிங் ஸ்பாட்டை 500m x 500m என்றளவில் குறுகியகதாக வைத்திருந்தோம். இதனால் லேண்டர் இறங்கும்போது அது எங்கள் கட்டுப்பாட்டை மீறி வெளியே சுழன்றது. இப்போது எங்களின் கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு திட்டமிட்டுள்ளோம். இந்த முறை சிறு தவறுக்குக் கூட நாங்கள் இடம் கொடுக்காமல் திட்டமிட்டுள்ளோம். எல்லாவற்றையும் சிறப்பாக பரிசோதனை செய்தோம். விண்கலன் உறுதியாக உள்ளது. அது எத்தகைய சாதகமற்ற சூழல்களையும் தாங்கும் திடத்துடன் இருக்கிறது. நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்.

அப்படி நாம் யோசிக்கவே கூடாது. அப்படியிருந்திருந்தால் எல்லாமே தவறாகப் போயிருக்கும். எங்கள் திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடப்பதால் இனி எல்லாமே சரியாகத்தான் நடக்கும். அதனால் ஒருவேளை ஏதேனும் தவறு நடந்தால் நிலைமையை சமாளிக்கத் தயாராக இருக்கிறோமா என்று நீங்கள் கேட்டால் ஆம் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்பதே எங்களின் நிலை.

சர்வதேச விண்வெளி துறையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே தனது தடத்தை வலுவாகப் பதித்துவருகிறது வெற்றிகரமான விண்வெளி ஆராய்ச்சி முகமைகளுடன் பணியாற்றியவே அனைத்து நாடுகளும், துறைகளும் விரும்பும். அந்தவகையில் இஸ்ரோ குறைந்த செலவில் வெற்றிகரமான ஆராய்ச்சி மிஷன்களை மேற்கொள்கிறது. அதனால் இன்று சந்திரயான்- 3 வெற்றிக்குப் பின்னர் இஸ்ரோவுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவிலான கூட்டுமுயற்சிகளுக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வாறு சோம்நாத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நிலவில் ஒருவேளை சூழல் சாதகமாக இல்லாவிட்டால் ஆக.27-ல் லேண்டர் தரையிறங்கும் என அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநர் நிலேஷ் எம்.தேசாய் தெரிவித்துள்ளார்.